திங்கள், 3 ஜூலை, 2017

சிறுகதை - வாய்ப்பு

“காப்பாத்துங்க..! காப்பாத்துங்க..!” – அவன் பயத்தில் அலறினான்.

ஒரு சிறிய கிராமம். அருகிலேயே ஒரு வயதான காடு..!
காடு என்றவுடன், ‘எர்வாமேட்டின்’ காட்டும் அமேசான் காடுகள் ரேஞ்சுக்குக் கற்பனை செய்யாதீர்கள். இரண்டு நாடுகளில் முகவரி போட்டாலே, எப்படி ஒரு நிறுவனம் “இன்டர்நேஷனல் கம்பெனி” – ஆகிறதோ, அப்படி, சில நூறு மரங்களும், சில புதர்களும் சேர்ந்து இருந்து, இடையில் முறையான சாலை இல்லையென்றால், அதன் பெயர் காடுதான்.

காட்டின் நடுவே ஒரு மிகப்பெரிய, ஆழமான பள்ளம் இருந்தது. காதலைப் போல, விழுந்துவிட்டால், மீளவே முடியாத அளவிற்கு, மிக ஆழமான பள்ளம். காட்டில் சுள்ளி பொறுக்கச் சென்ற சிறுவன் வேலன், ஒரு புதரில் தடுக்கி, அப்பள்ளத்தில் விழுந்துவிட்டான். அவன்தான் அலறினான்.

“பயப்படாதே, தம்பி..!” – குரல் கேட்டு, அதிக பயத்துடன் திரும்பினான். ஒரு உருவம் மங்கலாகத் தெரிந்தது. “தம்பி! நீ இங்க தனியாள் இல்ல. நாங்க இருக்கோம்!” – வாசன் ஐ கேர் விளம்பரம் போல, அந்த உருவம் பேசியது. 

“என்னது... நாங்களா..? நிறையப் பேர் ஏற்கனவே இந்தப் பள்ளத்துக்குள்ள இருக்காங்களா..?” வேலன் யோசிக்கும்போதே, தீப்பந்தம் ஒளிர, இருவர் முன்னே வந்தார்கள். பின்னால் பல பேர் இருந்தார்கள்.

“தம்பி, நாங்கள்லாம் உன்னை மாதிரி, தவறி விழுந்தவங்கதான். ரொம்ப காலமா, இங்கதான் இருக்கோம். அப்பப்ப, ஒவ்வொருத்தரா உள்ள விழவும், இவ்வளவு பேர் சேர்ந்துட்டோம்!”

“எப்படி உயிர் வாழறீங்க..?”

“அது ஒண்ணும் பிரச்சனையில்ல. பள்ளத்துக்குள்ள முளைக்கிற சின்னச் செடி, எறும்பு, மண்புழு-ன்னு ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். இது தவிர, குரங்கோ, காத்தோ மரங்களை அசைச்சா காய், பழம் ஏதாவது கிடைக்கும். தோண்டினா தண்ணி வரும். சாகற வரைக்கும் வாழணுமில்ல..?!”

“நம்ப ஊர்லயே மொத்தம் இருநூறு பேர்தான் இருப்பாங்க. இங்கயே 20, 25 பேர் இருக்கீங்க.! உங்களை யாருமே தேடலையா..? காப்பாத்த வரலையா..?”

“அதை நான் சொல்றேன்!” என்றபடி முன்னே வந்தாள், டிவி சீரியல் அண்ணி போன்ற ஒரு பெண். “நான் ஊர்ல இருந்தபோது, ஒரு கூட்டம் போட்டாக... அப்ப என்ன நடந்துச்சுன்னா...” என்றபடி, முகத்தை வானத்தை நோக்கிப் பார்த்தாள். மற்றவர்களும் மேலே பார்த்தார்கள்..! எதற்கு? பிளாஷ்பேக்- வருதாம்..!

கூட்டத்தில் ஒருவர் தொடங்கினார்... “அய்யா, இதோட நாலஞ்சு பேரைக் காணோம்! நேத்துலருந்து என் பொஞ்சாதியையும் காணோம்..! காட்டுக்குள்ள இருக்கற பள்ளத்துல விழுந்துட்டாங்க-ன்னு பலரும் பேசிக்கிறாக..! காப்பாத்துங்க அய்யா!”

“பொஞ்சாதியைக் காணோம்னா சந்தோசமா இருவே..!” நாட்டாமை சொல்ல, சிலர் மட்டும் சிரித்தனர். “ஆளைக் காணோம்னா, ஏதோ சாமிக்குத்தம் பண்ணிருக்குதாங்கன்னு அர்த்தம். பள்ளத்துல விழுந்துருக்காங்க-ன்னா, சில பேரு மட்டும் ஏன் விழுவுறாங்க..? அதோ இருக்காரே...  சாமி... விழுந்தாரா..? நம்ம அண்ணாச்சி விழுந்தாரா..? அவ்வளவு ஏன், நான் விழுந்தேனா..? பாவம் பண்ணவங்க... தொலையுறாங்க... விடுவே..!”

“ஆமா, அவங்கள்லாம் ஏன் விழலை..? நாம பாவம் செஞ்சவங்களா..?” – வேலனின் கேள்வி, பிளாஷ்பேக்கை நிறுத்தியது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா..! அவங்கள்லாம் காட்டுக்குள்ளயே வரமாட்டாங்க. அப்புறம் எப்படி பள்ளத்துல விழுவாங்க..? அவங்க தேவைக்கும் சேர்த்து, நாமதானே வேலை செய்றோம்..!?” – ஒரு மீசையண்ணா உறுமினார்.

வேலன் கேட்டான்... “அப்படின்னா, நாம இங்க விழுந்து கிடக்க, அவங்கதான் காரணமா..?”

“அவங்க நம்மளைத் தள்ளிவிடலையே..!” – கேட்ட ஒரு வெண்தாடிக்காரர், தொடர்ந்தார்... “ஆனா, நம்மளைக் கண்டுக்காம இருக்காங்க பாரு... அதுதான் தப்பு..! மனுசங்க, எல்லாரையும் ஒண்ணாப் பாக்குறதில்லை. நான் உன் வயசுல இருந்தபோது, அவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச, முடிஞ்ச வேலையைச் செய்யறோம்னுதான் நினைச்சோம். அப்புறமா, இந்த வேலை பெருசு, இந்த வேலை சிறுசு-ன்னு பிரிக்க ஆரம்பிச்சாங்க. நாமளும் ஏத்துக்கிட்டுப், பேசாம இருந்துட்டோம்..!”

வேலன் கொதித்தான்... “அப்ப பேசாம இருந்ததுதான் தப்பு..! வாங்க, எல்லாருமா கத்துவோம்..! காப்பாத்துங்க..! காப்பாத்துங்க..!”

“தம்பி, நேத்து விழுந்து செத்த நாய்க் கறி இருக்கு. இன்னிக்கு, நல்லா சாப்பிட்டுத் தூங்கு. நாளைக்குப் பார்க்கலாம்..!”

 மறுநாள், வேலன் எல்லோரையும் அழைத்துக் கத்தச் சொன்னான். சிலர் சேர்ந்து கத்தினார்கள். நீண்ட கால மௌனத்தால், சிலருக்குக் குரல் வரவே இல்லை. பல முறை கத்திய பின்னர், கத்தியவர்களின் தொண்டை வற்றியதே தவிர, உதவிக்கு யாரும் வரவில்லை. எல்லோரும் சோர்ந்து போனார்கள். வேலன் மட்டும் உறுதியாயிருந்தான்.

கொஞ்சம் உணவு – கொஞ்சம் ஓய்வு – கொஞ்சம் அலறல் என்று நாட்கள் பல கழிந்தன. மனித மொழி புரியவில்லையோ என்று, வேறு வேறு ஒலிகளை எழுப்புமாறு ஆணையிட்டான் வேலன். பிறகு, கட்டைகள், கிடைத்த பொருட்களைக் கொண்டு நில அதிர்வை உருவாக்க முயன்றனர். மரங்களைத் தவிர, மேலே இருந்த எந்த மனிதரிடத்தும் அசைவில்லை.

முதல் குரல் கொடுத்ததாலும், முன்னெடுத்ததாலும் கிட்டத்தட்ட, தலைவனாகி இருந்தான் வேலன். ஒருநாள் காலைக்கடனுக்காய் அமர்ந்திருந்தபோது, திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. அனைவரையும் கூட்டினான். “இனி நம் எல்லாப் போராட்டங்களையும், இரவு நேரத்தில் செய்வோம். அப்போதுதான், நம் ஒலிகள் அவர்களைத் தொல்லை செய்யும்..!” என்றான். அவ்வாறே செய்தார்கள். பலனும் கிடைத்தது.

பகலில், கிராமம் கூடியது. இரவுகளில் தூங்க முடியாமல், காட்டில் இருந்து பல்வேறு ஒலிகள் வருவது குறித்துக் கவலை கொண்டார்கள். எங்கிருந்து ஒலிகள் வருகின்றன எனக் கண்டுபிடிக்க, ஆட்களை நியமித்தார்கள். சில நாட்களுக்குப் பின், பள்ளத்திலுள்ள மனிதர்கள் பற்றி அறிந்தார்கள்.
நாட்டாமை தலைமையில், ஊர்ப்பெரியவர்கள், பள்ளத்தின் அருகே சென்றார்கள். சிறிய உருவங்களாய்த் தெரிந்த பள்ளவாசிகளிடம், பெரிய உருளைகளைக் கொண்டு பேசினார்கள். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பள்ளத்திற்குள் கயிறுகள் வீசப்பட்டன. ஆனால், அவ்வளவு உயரத்திற்கு, கயிறைப் பிடித்து ஏறப் பலருக்கும் தெரியவில்லை. ஏறத் தெரிந்தோருக்கும், உடல்வலு வற்றிப்போயிருந்ததால், ஏற முடியவில்லை.

மாற்று வழி கண்டறியும் வரை, இடைக்கால நிவாரணமாக, உணவுப் பொட்டலங்களும், தண்ணீர்ப் பானைகளும் பள்ளத்திற்குள் இறக்கப்பட்டன. தினமும் உணவும், தண்ணீரும் கிடைத்ததும், பள்ளவாசிகள் மகிழ்ந்தனர். கயிறைப் பிடித்து மேலே ஏறும் முயற்சியைக் கைவிட்டனர். பள்ளவாசிகள் அமைதியானதால், கிராமவாசிகளும் மகிழ்ச்சியுடன், அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர். வேலை செய்ய விரும்பாத சிலர், சும்மா இருந்தாலே உணவு கிடைக்கிறதே என்றெண்ணி, பள்ளத்திற்குள் வேண்டுமென்றே விழத் தொடங்கினர்.

இதையெல்லாம் கவனித்திருந்த வேலனின் கவலை அதிகரித்தது. ஒருநாள் வெடித்துச் சீறினான். “இப்படியே எத்தனை நாள் இருக்கப் போகிறீர்கள்..? மேலே ஏறும் உத்தேசம் இல்லையா..?”

“நம்மால் வேறு என்ன செய்ய முடியும்..?” – பள்ளவாசிகள்.

“என்னால் முடியும். நான் ஒருவன் மேலே ஏறி விட்டால், கிராமவாசிகளிடம் பேசியோ, மிரட்டியோ உங்கள் அனைவரையும் மீட்பேன். ஆனால் அதற்கு நீங்கள் உதவ வேண்டும்..!”

சிலர் கோபுர வடிவத்தில் முதுகில் சுமக்க, சிலர் தூக்கிவிட, சிலர் மண்ணைச் செதுக்க, சிலர் உபகரணங்கள் செய்து தர என்று எல்லோரும் உதவி செய்ய, கொஞ்சம் சுயமுயற்சி சேர்த்து, கயிறு பிடித்து, மிகுந்த சிரமப்பட்டு, மேலே ஏறினான் வேலன். பள்ளவாசிகள் ஆனந்தக் கூத்தாடினர்.

கிராமத்திற்குள் வந்த வேலன், நாட்டாமையைச் சந்தித்தான். பள்ள வாழ்க்கையை விவரித்தான். பிறகு, “நீங்கள் எனக்கு, நிறைய சம்பளத்துடன், கிராம அதிகாரி என்னும் பதவியைத் தர வேண்டும். இல்லையென்றால், பள்ளவாசிகளைத் திரட்டிப் போராடுவேன். உங்கள் தூக்கத்தைக் கெடுப்பேன்..!” என்று மிரட்டினான்.

பள்ளத்தில் தொங்கிக் கொண்டிருந்தன... கயிறுகளும், கனவுகளும்..!

செவ்வாய், 19 ஜூலை, 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை - 3


நூல்: நல்லவன் வெல்வது எப்படி..?
ஆசிரியர்: பவான் சவுத்ரி
வெளியீடு: Wisdom Village Publications Pvt. Ltd.
பக்கங்கள்: 208    விலை: ரூ. 150/-

சில புத்தகங்களின் தலைப்பே நம்மை வாங்கவும், வாசிக்கவும் தூண்டும். அப்படி ஒரு நூல்தான் இது.

நான் வெற்றியாளனா என்பதில் எனக்குள்ளும், என்னை அறிந்தவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் எப்போதும் நிலவுகின்றன. ஆனால், நான் நல்லவன் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். வெற்றி  என்றாலே தவறான வழிகளில் அடைவது என்று சமகாலம் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. அப்படியானால், என் நல்ல தன்மைகள் மாறாமல், நான் எப்படி "பெருவெற்றி" பெறுவது என்று நீண்ட நாட்களாக சிந்தித்து இருக்கிறேன். என் சிந்தனைகள் வளம்பெற இந்த நூல் பேருதவி புரிந்துள்ளது.

சிறந்த சிந்தனையாளராக விளங்கும் பவான் சவுத்ரி, அவ்வப்போது நமக்குத் தோன்றும் சிந்தனைகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவ்வளவு சிந்தனைகளைத் தொகுத்து வழங்குவது என்பது ஒரு இமாலயப் பணி. அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மூன்று பெரும்பகுதிகளை உள்ளடக்கிய இந்நூலில், முதல் பிரிவில் நேர்மையற்றவர்கள் செயல்படும் விதங்களை, 14 தலைப்புகளில் விளக்கியுள்ளார். எல்லா நேர்மையாளர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவற்றில் உள்ளன. ஏனென்றால், அப்போதுதான் விழிப்போடு இருந்து தன்னையும், பிறரையும் காக்க முடியும்.

இரண்டாவது பிரிவில், நேர்மையற்றவர்களை சமாளித்து எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான தந்திரங்கள், வல்லமைகள், வழிமுறைகளை மிகச் சிறப்பாக 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார். வெறும் நம்பிக்கையை மட்டுமல்லாது, நடைமுறையில் நல்லவர்கள் வெல்வதற்கான வழிகளையும் அருமையான உதாரணங்களோடு தந்திருக்கிறார்.

மூன்றாவது பிரிவில், ஆளுமையின் அடித்தளங்கள் என்று பல தலைப்புகளைத் தந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, மிகவும் சுமாரான பகுதி இது. தத்துவங்களும், பொன்மொழிகளுமே நிறைந்துள்ளன.

வழக்கம்போல், கடினமான மொழிபெயர்ப்புதான் என்றாலும், நிறைவாகவே செய்துள்ளார் சின்னத்தம்பி முருகேசன். சிற்சில குறைகள் இருக்கின்றன... வார்த்தைகளின் தேர்விலும்  வாக்கிய அமைப்பிலும். பரவாயில்லை.

மொத்தத்தில், இது ஒரு முறை படித்து, விட்டு விடும் நூல் அல்ல. பல முறை படிக்க வேண்டியது. அடிக்கடி சிந்திக்க வேண்டியது. பாதுகாத்து அவ்வப்போது சரிபார்க்க வேண்டியது. இது வரை நான் படித்துள்ள ஆயிரக்கணக்கான நூல்களில், ஆகச்சிறந்த 50 நூல்களில், நிச்சயம் இந்த நூலுக்கு இடம் உண்டு.

வெள்ளி, 15 ஜூலை, 2016

Mr.K.Murugabharathi Speech at YADHAVA COLLEGE

மதுரை EMG யாதவா மகளிர் கல்லூரியின், Fresher's Day விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நான் ஆற்றிய உரையை, விருட்சம் டிவி, YouTube-ல் Upload செய்துள்ளனர். முழு உரையின் ஒலிப்பதிவை, இந்த link-ல் கேட்டு, தங்கள் மேன்மைமிகு கருத்துகளைப் பதிவிடுங்கள்.



வியாழன், 30 ஜூன், 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை: - 2





நூல்: வாங்க அறிவியல் பேசலாம்
ஆசிரியர்: இரா. நடராசன்
வெளியீடு: Books for Children
பக்கங்கள்: 112        விலை: ரூ. 80/-

பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்தும், (1996-ல் அது உசத்தி) +1-ல் Commerce Group-ல் நான் சேர்ந்ததற்குக் காரணமே, எனக்கு அறிவியல் பாடம் பிடிக்காது என்பதால்தான். அப்படிப் பிடிக்காமல் போனதற்கு ஒரு ஆசிரியர்தான் காரணம் என்றாலும், அதற்குப் பின்னும் சுமார் 15 ஆண்டுகளுக்கு, (சுஜாதாவின் நூல்கள் தவிர) எனக்கும் அறிவியல் குறித்த புத்தகங்களுக்கும் தொடர்பே இல்லாமல் போனது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான், ஸ்டீபன் ஹாகிங்ஸ், பில் பிரைசன் போன்றோரின் சில நூல்களைப் படித்து வருகிறேன்.

     அறிவியல் உட்பட, கல்வி குறித்து எழுதுபவர்களில் நான் மதிக்கும் சிலரில் முக்கியமானவர் ‘ஆயிஷா’ இரா. நடராசன். அவர் மொழியாக்கம் செய்து, தொகுத்திருக்கும் நூல்தான் ‘வாங்க அறிவியல் பேசலாம்’. உலகப் புகழ் பெற்ற 15 அறிவியலாளர்களின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு காலங்களில், பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவர்களின் நேர்காணல்களைத் தேடித் தொகுத்திருப்பதற்காகவே நிச்சயம் பாராட்டலாம். சாமானியர்களும் அறிந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர்.சி.வி. ராமன் போன்றவர்கள் முதல், அறிவியலைக் கவனிப்போர் மட்டுமே அறிந்த கார்ல் சாகன், ரிச்சர்ட் டாக்கின்ஸ் வரை, சிறந்த அறிவியல் ஆளுமைகளின் சாதனைகள் மற்றும் கருத்துகளை அனைவரும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

        அறிவியல் மட்டுமல்லாது, சமகால அரசியல் மற்றும் சமூகவியலைப் புரிந்துகொள்ளவும் இப்புத்தகம் பயன்படும். அறிவியல் ஆள்பவர்களுக்கானது அல்ல; அது மக்களுக்கானது என்ற கருத்து, நூல் முழுவதும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட அறிவியலாளர்களின் பொதுநலனும், தியாகமும், விடாமுயற்சியும், தங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த அறிவியலாளர்கள் மீது கொண்டுள்ள மதிப்பும் அனைவரும் போற்றவும், பின்பற்றவும் வேண்டியவை.
     புத்தகத்தில், என்னைத் தாக்கிய, எண்ணங்களைத் தூக்கிய ஏராளமான வரிகளில், சிலவற்றை இங்கே தருகிறேன்.
-- “சந்தைத் தலையீடுகள், இன்று வெற்றி என்பதைக் கருத்தாக்கத்தின் புதிய சிந்தனைப் பதிவாகப் பார்க்காமல், அதிக விற்பனைத் தன்மையாகப் பார்க்கும் அவலம், அறிவியல் சிந்தனைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.” – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.
-- “நாங்கள் எங்கள் Web-க்கு (www) கட்டணம் வசூலிக்காதது மட்டுமல்ல, கண்டுபிடிப்பு உரிமமோ, உரிமை வசூலோ (Royalties) இன்று வரை ஒரு டாலர் கூட பெற்றது இல்லை. பொது சேவை – அதுவே எனது குறிக்கோள். ஆகஸ்ட் 6 என்பது ஹிரோஷிமாவை நினைவுபடுத்தும் பேரழிவு நாள். அதே நாளில் இணையத்தை, உலகை ஒன்றிணைக்கும் முயற்சியாக வெளிப்படுத்த நான் விரும்பினேன்.” – டிம் பெர்னர் லீ.
-- “ஒருவர் பெரிய ஆளாக வாழ்கிறாரா என்பதை விட, தன் சுய விருப்பப்படி பாசாங்கற்ற மனிதராக வாழும் உரிமை பெரியது.” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
-- “என் ரத்த நாளங்களிலிருந்து அணுக்கதிர் வீச்சு முழுமையாக விலகவில்லை. என் குழந்தைகளுக்கும் அதே நிலை. ஆனால், உலகம் பாடம் கற்கவில்லை என்றே தோன்றுகிறது.” – ட்சுடோமு யாமகுச்சி (ஹிரோஷிமா, நாகசாகி இரண்டு அணுகுண்டுத் தாக்குதலிலும் உயிர் பிழைத்த ஒரே மனிதர் – 2009-ல் அளித்த பேட்டியில்)
-- “ஏனைய விலங்குகள் போலன்றி, மனிதன் தனக்குள் தானே எப்போதும் எதையோ பேசியபடியே இருப்பதை நிறுத்த முடிவதில்லை. உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதை நிறுத்த எவ்வளவு முயன்றாலும் முடிவதே கிடையாது.” – நோம் சாம்ஸ்கி.
-- “பழைய அரைத்த மாவையே அரைத்து, பி.எச்.டி. வாங்கி, அதிகாரக் குழுமத்தில் இடம் பிடித்து... வரும் சந்ததியையும் வீணடிக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் (IT sector) லட்சக்கணக்கான இளைஞர்களை இழுத்து வீணடித்து விட்டது. அங்கே ஒரே மாதிரி வேலையை, இரவும் பகலும் பார்த்து, தனது இளமையை முற்றிலும் பணமாக்குவது தவிர, அறிவியலுக்கு அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.” – சி.என்.ஆர். ராவ் (பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி)
     இப்படி ஏராளமான அரிய செய்திகளும், சிந்தனைகளும் புத்தகம் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன. குறைகளும் உண்டு. மிகச் சுமாரான மொழியாக்கமும், எழுத்துப் பிழைகளும் தடங்கல்களாக நிற்கின்றன. பொதுவான நூலாக இன்றி, நூலாசிரியர், தன் கருத்துகளுக்கு ஏற்ற அறிஞர்களின் கருத்துகளை மட்டும் தேர்வு செய்திருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. குறிப்பாக, நாத்திகவாதமும், இடதுசாரிப் பற்றும் கொஞ்சம் தூக்கலாக உள்ளது.

     மொத்தத்தில், அனைவரும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டிய அறிவுப் பெட்டகம். பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் இந்த நூல்.

செவ்வாய், 28 ஜூன், 2016

Rtr.K.Murugabharathi Effective Speech



திருச்சி ராக்போர்ட் ரோட்டரி சங்கத்தின் கூட்டத்தில், ஜூன் 9-ல்,  "வழியை மாற்றுங்கள் -
தொழிலை அல்ல..!" என்ற தலைப்பில், 30 நிமிடங்கள் நான் ஆற்றிய உரையின்
ஆடியோ, விருட்சம் டிவி மூலம் இணையத்தில் வெளியிடப் பெற்றுள்ளது. கேட்டுப்
பயன்பெறுமாறு வேண்டுகிறேன்.

(Rtr முடித்து, Rtn ஆகி, அதிலிருந்தும் விலகிய பின், பழைய நினைவில் தம்பி Muthu Palaniappan, 'Rtr' என்று போட்டு விட்டார்.)